ஜே.பி நட்டாவை ஏன் சந்தித்தேன் – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!
மரியாதை நிமித்தமாகவே பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பாஜக தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா 3 நாட்கள் சுற்றுப் பயணமகா தமிழகம் வந்துள்ளார்.சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் தனி விமானத்தில் மதுரை வந்த ஜே.பி.நட்டா நேற்று இரவு தனியார் விடுதியில் தங்கினார்.
இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், கோவிலில் இருந்து விடுதிக்கு திரும்பிய பிறகு தமிழக பாஜக முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினார்.
கட்சி ரீதியாக தமிழகம் வந்திருக்கும் ஜே.பி நட்டாவை விஜயபாஸ்கர் சந்தித்தது பேசியது விவாதமானது. இந்த நிலையில், மதுரையில் ஜே.பி நட்டாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மரியாதை நிமித்தமாக அவரை தான் சந்தித்ததாக விளக்கம் அளித்தார்.