ஜோதிமணியைப் பற்றி ஆபாசமாக கூறினாரா சீமான்? - சர்ச்சையை கிளப்பிய பேட்டி

Indian National Congress Naam tamilar kachchi Seeman
By Petchi Avudaiappan May 24, 2022 05:29 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தம்மை பாலியல் குற்றவாளி என சொன்ன காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்த நிலையில் இவ்விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

அண்மையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர்களில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சீமான் காங்கிரஸ் கட்சியையும், ராஜூவ் காந்தியையும் கடுமையாக விமர்சித்தார். இது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் பல இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் நடந்தது. 

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது என கூறியிருந்தார். 

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பதிலளித்த சீமான், இதை நீங்க அவர்கிட்ட தான் கேட்கனும்... எந்த இடத்தில் உன் கையை புடிச்சு இழுத்தார்? எங்கே உன்னை கூப்பிட்டார்னு நீங்க கேட்க வேண்டியதுதானே.. நான் பாலியல் குற்றம் செய்த போது பக்கத்தில் இருந்து நீ பார்த்தியா? எதையாவது பேசிகிட்டு இருக்கக் கூடாது என விமர்சித்தார். 

மேலும் நீ எல்லாம் பாராளுமன்ற உறுப்பினரா? உன்னை மானங்கெட்டுப் போய் ஓட்டு போட்டோம் பாரு.. பாலியல் குற்றவாளி யாரு? ராஜீவ் காந்திதான். பல்லாயிரக்கணக்கில் என் அக்கா தங்கையை வன்புணர்வு செய்து கொலை செய்ய வெச்ச பாவி ராஜீவ் காந்தி.. என் வாயை கிளறாமல் போகனும் நீங்க என கடுமையாக பேச இவ்விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. 

இந்நிலையில் கரூரில் எம்பி. ஜோதிமணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சீமான் பேச்சுக்கு கடுமையான பதிலடியை கொடுத்தார். அப்போது நாம் தமிழர் கட்சி சீமான் பேசியதற்கு பதில் சொன்ன எனக்கு தனிப்பட்ட வகையில் ஆபாசமாக பதில் அவர் கூறியிருக்கிறார் . நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அதில் உண்மை இல்லையென்றால் இதுகுறித்து சீமான் நீதிமன்றத்தில் ஏன் நஷ்ட ஈடு வழக்கு போடவில்லை? . அரசியலுக்கு வரும் பெண்கள் மீது ஆபாச தாக்குதல் நடத்தினால் பயந்து ஓடிவிடுவார்கள் என நினைக்கிறார்கள். எனக்கு இது புதிதல்ல. பாஜகவின் பி டீம்தான் நாம் தமிழர் கட்சி என தெரிவித்துள்ளார். 

கரூர் தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்துள்ளனர் என கூறியதற்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். சீமான் போல இலங்கை தமிழ் மக்களை தமிழர்களை சுரண்டி ஆடம்பர, உல்லாச வாழ்க்கை வாழக்கூடியவர்கள் இல்லை.கரூர் மக்கள் உழைத்து வாழக்கூடியவர்கள். பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம். சீமான் பாலியல் குற்றவாளி என ஜோதிமணி கூறியுள்ளார்.