தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகிறாரா ஜோதிமணி? - அதிர வைக்கும் தகவல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை ஜோதிமணி பெறப்போகிறார் என்ற தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக, அதிமுக, காங்கிரஸ் என முக்கிய கட்சிகளில் உள்கட்சித் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலிருந்து கீழ் வரை நிர்வாகிகளாக தங்களது ஆதரவாளர்களை பதவிக்கு கொண்டு வர வேண்டும் என அரசியல் தலைவர்கள் திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி ஜூன் 10 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி நடக்கவுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த மாநில தலைவர் ஒரு பெண்ணாக இருக்கலாம் எனவும் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டு சென்றார்.
காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவர்களாக இந்திரா காந்தி, சோனியா காந்தி இருந்திருந்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இதுநாள் வரை ஒரு பெண் தலைவராக வந்ததில்லை. இம்முறை அந்த வாய்ப்பு ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது என அழகிரி தெரிவித்திருந்தார்.
யார் அவர் என விசாரிக்கும் போது கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஜோதிமணி காங்கிரஸ் கட்சிக்குள்ளே அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் என்பதால் அவரால் தான் காங்கிரஸை தமிழ்நாட்டில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என தலைமை நினைப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ராகுல்காந்தியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஜோதிமணி ஒருங்கிணைத்து அவரின் நன்மதிப்பை பெற்றதால் இந்த பதவி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.