அடக்குமுறை அரசின் அடிமைகள்: சச்சின் மீது ஜோதிமணி எம்பி காட்டம்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு எதிராக, மத்திய அரசுக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த பகுதியில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரம், கழிப்பறை வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பாடகி ரிஹானா கருத்து தெரிவித்ததற்கு இந்திய பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில், உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம், பங்கேற்க முடியாது. இந்தியாவில் உள்ளவர்களுக்கே இந்தியாவைப் பற்றி தெரியும்.
இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம். இந்திய இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் ஜோதிமணி எம்பி டுவிட்டரில், ‘‘விவசாயிகள் மீது மோடி அரசாங்கம் கடுமையான அடக்குமுறையை ஏவும்போது பிரபலங்களுக்கு வராத கோபம், விவசாயிகளுக்கு ஆதரவான குரல்களை நோக்கி வருகிறதென்றால், அவர்கள் இந்தியாவின் வரமல்ல, சாபம். அம்பானி, அடக்குமுறை அரசின் அடிமைகள். #SachinTendulkar’’ என சாடியுள்ளார்.
விவசாயிகள் மீது மோடி அரசாங்கம் கடுமையான அடக்குமுறையை ஏவும் போது பிரபலங்களுக்கு வராத கோபம், விவசாயிகளுக்கு ஆதரவான குரல்களை நோக்கி வருகிறதென்றால், அவர்கள் இந்தியாவின் வரமல்ல,சாபம். அம்பானி,அடக்குமுறை அரசின் அடிமைகள்.#SachinTendulkar
— Jothimani (@jothims) February 4, 2021