ஆஸ்திரேலியாவை பஞ்சராக்கிய பட்லர் - மிரண்டுபோன வீரர்கள்
டி-20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை, இங்கிலாந்து அணி புரட்டி எடுத்தது.
டி20 உலகக் கோப்பை தொடரில், 26-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது.
வழக்கம் போல டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் நின்று ஆடிய வார்னர்,
இந்தப் போட்டியில் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் வோக்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஸ்மித்தும், ஜோர்டன் பந்துவீச்சில் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க தடுமாறத் தொடங்கியது அந்த அணி
அடுத்து வந்த ஜாம்பவான் வீரர்களும் வந்த வேகத்திலேயே சென்றனர். மேக்ஸ்வெல் 6, ஸ்டோயின்ஸ் 0 , மேத்யூ வேட் 18, ஆஷ்டன் அகர் 20, பேட் கம்மின்ஸ் 12, ஸ்டார் 13 என ஆட்டமிழக்க, கேப்டன் பின்ச் மட்டும் பொறுப்புடன் ஆடி 44 ரன்கள் சேர்த்தார்.
இதனால் 20 ஓவர் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளும், வோக்ஸ், மில்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர், 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ஜேசன் ராயும் ஜாஸ் பட்லரும் அதிரடியாக ஆடினர்.
ஜேசன் ராய் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேவிட் மலான் 8 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஜாஸ் பட்லருடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அதிரடியில் மிரட்டியதால் அந்த அணி, 11.4 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஜாஸ் பட்லர் 32 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்சர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். பேர்ஸ்டோவ் 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் அஸ்டன் அகர் மற்றும் சாம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.