நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவிக்கு 15மில்லியன் டாலர் அபராதம்!
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் முன்னாள் மனைவி ஆம்பேருக்கு 15 மில்லியன் டாலர் அபராதமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹாலிவுட்டின் முன்னனி நடிகராக வலம் வந்தவர் ஜானி டெப். இவரது பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது.
இந்நிலையில் இவர் 1983ம் ஆண்டு அன்னி அல்லிசன் என்பாரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணமன இரண்டாம் ஆண்டிலேயே இருவரும் விவாகரத்து செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு பிரபல நடிகை அம்பேர் ஹெர்டை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
2017ம் ஆண்டு அம்பேர் ஹெர்டும் ஜானியை விவாகரத்து செய்தார். பின்னர் ஆம்பேர் ‘வாஷிங்டன் போஸ்ட்’ என்ற பத்திரிகையில் எழுதிய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றிய கட்டுரையில் ஜானியின் பெயரை குறிப்பிடாமல் அவர் மீது குற்றம்சாட்டும் வகையில் கருத்துக்களை கூறியிருந்தார்.
இதனால் ஜானி டெப்பின் ஹாலிவுட் படங்கள் பல அவர் கை விட்டுச் சென்றன. ஹாலிவுட் சினிமாவில் பேரிழப்பை சந்தித்தார்.
இதனையடுத்து 2018ம் ஆண்டு அம்பேர் மீது ஜானி டெப் அவதூறு வழக்கு ஒன்றை பதிவுச்செய்து அபராத தொகையும் கேட்டிருந்தார்.
கடந்த சில மாதங்களாக வழக்கிற்கான விசாரணை நடந்து வந்த நிலையில் அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இந்நிலையில் நேற்று (ஜூன் 1) ஜானி சமர்பித்த ஆதாரங்கள் உண்மை என நிரூபிக்கபட்ட நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் ஜானி சமர்ப்பித்த ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஆம்பேர் அவதூறு பரப்பியது உறுதி செய்யப்பட்டது.
மேலும் ஆம்பேருக்கு 15 மில்லியன் டாலர் தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டது. இது அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.