உண்மையில் இங்கிலாந்து தோற்க இவர்கள் தான் காரணமா? - அழாத குறையாக பேசிய ஜோ ரூட்
ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் வேதனையுடன் பதி்லளித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் பாக்ஸிங் டே(3வது டெஸ்ட்) போட்டி மெல்போர்னில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.ஏற்கனவே இங்கிலாந்து முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகள் மற்றும் 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் இப்போட்டி அவர்களுக்கு வாழ்வா? சாவா? போட்டியாக அமைந்தது.
ஆனால் வழக்கம் போல ஆஸ்திரேலியா பவுலர்களிடம் இங்கிலாந்து சரணடைந்தது. இந்த முறை மிக மோசமாக இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஷஸ் கோப்பையை 3-0 என்று ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் படுமோசமாக இங்கிலாந்து அணி தோல்வியுற்றதால் விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முதல் இன்னிங்சில் 82 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எந்தவித பொறுப்பும் இன்றி வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.இந்த தொடரில் ஜோ ரூட் மட்டுமே தனி ஒருவராக நின்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சமாளித்து வந்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர். மேலும் பந்துவீச்சாளர்களை ஜோ ரூட் கையாண்ட விதமும் சரியில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே போட்டிக்குப் பின் பேட்டியளித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் வேதனையுடன் சில கருத்துகளை வெளிப்படுத்தினார். அதில் ஆஸ்திரேலிய மைதானங்களில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மைதானத்திற்குள் வந்து முழு கவனத்துடன் விளையாடவேண்டும். அன்றைய நாள் உங்களுக்கானதாக அமைந்தால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். இல்லையென்றால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தற்போது நடந்ததை போல ஊதித் தள்ளி விடுவார்கள்.
இரண்டாவது இன்னிங்சை நாங்கள் தொடங்கிய விதம் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. வீரர்களை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் நடந்ததை யோசிப்பதை விட அடுத்து வரும் 2 போட்டிகளுக்கு நாங்கள் நிறைய உழைக்க வேண்டியதாக இருக்கிறது. ஆகையால் எங்கள் கவனம் அதில் மட்டுமே இருக்கும். இந்த தொடர் முடியும் வரை விமர்சனத்திற்கு செவிசாய்க்க வேண்டாம் என நினைக்கிறேன்.