வேலை வாய்ப்பு கொடுங்கள் மோடி என 44 லட்சம் பேர் ட்வீட்: இந்தியளவில் ட்ரெண்டாகியது
மோடி வேலை கொடுங்கள் என்ற கோஷங்களுடன் டுவிட்டரில் ‘மோடி ஜாப் டூ’ (modi_job_do) என்ற ஹேஷ்டாக் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளது. இந்த ஹேஷ்டாக்கில் 44 லட்சம் பேர் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹேஷ்டேக் ஆளும் பாஜகவை திணறடித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர்.
சி.எம்.ஐ.இ.இ அறிக்கையின்படி, ‘கடந்தாண்டு மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு, மாத சம்பள வருவாய் பெற்ற 1.77 பேர் வேலை இழந்திருக்கிறார்கள். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் மேலும் பலர் வேலையை இழந்தனர். தற்போது ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளவில்லை என்றாலும் கூட பொருளாதாரம் மெதுவாக மீண்டு வருகிறது.
வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகவும் மத்திய அரசு உறுதியளித்து வருகிறது’என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவதால், இது குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பிரதமர் மோடியிடம் தங்களுக்கு வேலை வேண்டும் என்று பலர் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்காக, ‘மோடி ஜாப் டூ’ (modi_job_do) என்ற ஹேஷ்டேக் நேற்று முன்தினம் முதல் தேசிய அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் 44 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டுவிட் செய்துள்ளனர். பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தபோது இரண்டு கோடி வேலைகள் வழங்கப்படும் என்று உறுதியளித்ததில் என்ன நடந்தது? என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.