வெளியேற விரும்புவோரை அப்புறப்படுத்தும்வரை அமெரிக்க ராணுவம் காபூலில் நிற்கும் - ஜோ பைடன் அதிரடி
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் வரை அமெரிக்க ராணுவத்தை காபூல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவர்களது கொடூரமான ஷரியத் சட்டங்களுக்கு அஞ்சி, பொதுமக்கள் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அங்கிருந்து எப்படியாவது தப்பிச் சென்று விட வேண்டும் என காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இதனால், விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டிருப்பதை அடுத்து, அமெரிக்க ராணுவ வீரர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமானோர் காத்திருக்கும் நிலையில், ஒரு பெண் தான் உயிரிழந்தாலும், தனது பச்சிளம் குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காக, மதில் மேல் நின்றிருந்த ராணுவ வீரரிடம், குழந்தையை ஒப்படைக்கும் காட்சிகள் வெளியாகி அனைவரது நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
ஆப்கானிஸ்தானில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், தற்போதைய நிலவரம் குறித்தும், அங்கிருப்பவர்களை அப்புறப்படுத்துவது குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
அதில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் வரை அமெரிக்க ராணுவத்தை காபூல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்க அவர் முடிவு எடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க ராணுவ மேஜர் ஜெனரல் ஹங் டெய்லர், பொதுமக்களை வெளியேற்ற வசதியாக காபூல் விமான நிலையத்தில் தற்போது 5 ஆயிரத்து 200 அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
ஒரு நாளில் 9 ஆயிரம் பேர் வரை வெளியேற்ற போதுமான விமானங்கள் கைவசம் இருப்பதாகவும் கடந்த 14 ஆம் தேதி முதல் இதுவரை 7 ஆயிரம் பேரை விமானம் மூலம் வெளியேற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.