ஜெயலலிதா பெயர் சூட்டிய நிலா சிங்கம் கொரோனாவால் உயிரிழப்பு..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் வைத்த பெண் சிங்கம் நிலா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் கவிதா என்கிற பெண் சிங்கம் 3 பெண் குட்டிகளை ஈன்றது. இதையடுத்து இக்குட்டிகளுக்கு பெயர் சூட்டும்படி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அக்டோபர் மாதத்தில் கலா, நிலா, மாயா என்று 3 பெண் சிங்கக் குட்டிகளுக்கும் பெயர் சூட்டினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அந்த நிலா பெண் சிங்கம் கடந்த 2018ம் ஆண்டில் இறுதியில் ஒரு குட்டியை ஈன்றது. அக்குட்டிக்கு பெயர் சூட்டும்படி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து 2018ல், அந்த சிங்க குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விலங்குகள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பார். அவரின் நினைவாக இந்த 6 மாத பெண் சிங்க குட்டிக்கு, ’ஜெயா’ என்று பெயர் சூட்டுகிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையில் வண்டலூர் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டிருக்கிறது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்று பணி புரிந்து வருகின்றனர்.
பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதும், அதில் ஒரு சிங்கம் கொரோனாவால் உயிரிழந்ததும் தெரியவந்ததால், மற்ற சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்த அந்த ஒரு சிங்கம் மறைந்த முன்னாள் முதல்வர் பெயர் வைத்த நிலா சிங்கம் என்பது தெரியவந்தது. பூங்காவில் உள்ள 11 சிங்கங்களுக்கு பசியின்னை மற்றும் சளி தொந்தரவு இருப்பதால் அச்சிங்களுக்கு பரிசோதனை நடந்து வருகிறது.