ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் நல்லவள் போல் நடித்து கைவரிசை காட்டிய வேலைக்காரி - திருடிய நகைகள் பறிமுதல்
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகைகளை திருடிய பெண் பணியாளர் மற்றும் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் நில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் திருட்டு
சென்னை போயஸ்கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் வசித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா.
இவர் வீ்டில் கடந்த மாதம் லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் வைர நகைகள் காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்தார்.
மேலும் அவர் அளித்திருந்த புகாரில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு லாக்கரில் வைத்திருந்த நகைகளை திறந்து பார்க்கவில்லை எனவும் தெரிவித்து இருந்தார்.
தனது சகோதரி திருணமத்திற்கு பிறகு சிஐடி நகர், போயஸ்கார்டன், செயின்ட் மேரிஸ் சாலை ஆகிய மூன்று வீடுகளில் லாக்கரில் மாறி மாறி நகைகள் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
நகைகள் திருட்டு போயிருப்பதில் வீட்டில் பணிபுரியும் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசன் உட்பட மூன்று பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
கைவரிசை காட்டிய வேலைக்காரி, கார் ஓட்டுநர்
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் பரிவர்சத்தனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மந்தைவெளியைச் சேர்ந்த ஈஸ்வரி, மற்றும் திருவேற்காட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஈஸ்வரி கடந்த 18 ஆண்டுகளாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றி வந்ததும், வீட்டில் லாக்கர் சாவி இருக்கும் இடத்தை அறிந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொஞ்சம் கொஞ்சமாக திருடியது தெரியவந்துள்ளது.
ஈஸ்வரிக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் குடும்ப சூழ்நிலையால் நகைகளை திருட முடிவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி விற்பனை செய்து நிலம் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோழிங்கநல்லுாரில் 1 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கியுள்ளார் மேலும் இரண்டு ஆண்டுகளில் அந்த கடனை திருப்பி அடைத்துள்ளார்.
திருடிய நகைகள் பறிமுதல்
இந்த திருட்டிற்கு ஈஸ்வரிக்கு உடந்தையாக கார் ஓட்டுநர் வெங்கடேசனும் இருந்ததும் அவருக்கும் திருடிய நகைகளில் பங்கு சென்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் திருடிய நகைகளில் வாங்கி 1 கோடி மதிப்புள்ள நில பத்திரங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருடப்பட்ட நகைகளை பிரபல ஜவுளிக்கடையில் விற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.