நகைக்கடன், சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: ஸ்டாலின் சொல்வதை செய்கிறாரா முதல்வர் எடப்பாடி?
விவசாயிகள் வாங்கிய நகைக்கடன், கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரையிலான நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் பழனிசாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
முன்னதாக விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அதே போல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சார விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, விவசாயிகள் வாங்கிய நகைக்கடன், கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரையிலான நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் ஆகியவை ரத்து செய்யப்படும் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போலவே விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து அதனை செயல்படுத்தினார் முதல்வர்.
ஸ்டாலினும், திமுகவும் சொல்வதை தான் முதல்வர் செய்து வருகிறார் என திமுக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் அதற்கு முன்பாக பல அதிரடியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.