சென்னையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை - 3 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீசார்
தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த 3 கொள்ளையர்களை போலீசார் 2 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
நகைக்கடையில் கொள்ளை
சென்னை தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை கவுரிவாக்கம் பகுதியில் ப்ளூ ஸ்டோன் என்ற தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் நகைக்கடை உள்ளது.
கீழ் தளம், முதல் மாடி, 2வது மாடியில் இந்த கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ஜெகதீசன். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு உரிமையாளர் ஜெகதீசன் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். இரவு காவலாளி, கடையின் முன்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஜெகதீசனின் செல்போனுக்கு எச்சரிக்கை ஒலி வந்துள்ளது. துாங்கி கொண்டிருந்த அவர் திடுக்கிட்டு எழுந்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் உஷார் படுத்தப்பட்டு சேலையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு கடை ஊழியர்களும், உரிமையாளரும் வந்துள்ளனர்.
பின்னர் கடையை திறந்து பார்த்த போது டிஸ்பிளேயில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். பின்னர் கடை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர்.
சிசிடிவி காட்சியின் பதிவுகளை வைத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
3 பேர் அதிரடி கைது - பாராட்டு
அப்போது டீ கடை ஒன்றில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது இப்போதுதான் அந்த நபர் இங்கு டீ குடித்து விட்டு சென்றார்’ என அந்த உரிமையாளர் தெரிவித்தார்.
உடனே உஷாரான போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அவர் அதே பகுதியில் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.
அங்கு, கொள்ளையடித்த நபர் இருந்தார். அவருடன் மேலும் 2 பேர் இருந்தனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
நகைகளை தேடினர். அந்த அறையின் மேல் பகுதியில் மறைத்து வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் எப்படி நகைகளை கொள்ளையடித்தனர் என்று தெரிவித்துள்ளனர் . கொள்ளையடித்த வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் 2 மணி நேரத்தில் பிடித்து கைது செய்தனர்.
துரிதமாக செயல்பட்ட போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர். கொள்ளையடிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் முழுமையாக மீட்கப்பட்டது.