விரைவில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி : அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஆட்சியில் கூட்டுறவு பணிகளில் சேர்வதற்கான நேர்காணல் முடிந்தவர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் ஐந்து சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு கடன் தள்ளுபடி கொடுத்து உள்ளதாக புகார்கள் வருவதாகவும், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.