வேற லெவலில் பந்துவீசிய கெய்ல் ஜெமிசன் - மிரண்டு போன ரஹானே
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 258 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி கான்பூரில் நேற்று துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டனான ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு மாயன்க் அகர்வால் 13 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன்பின் களமிறங்கிய கேப்டன் ரஹானே 35 ரன்களிலும், துணை கேப்டன் புஜாரா 26 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினாலும், அடுத்ததாக கூட்டணி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் – ஜடேஜா ஜோடி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு விளையாடியதன் மூலம் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 258 ரன்கள் எடுத்தது.
136 பந்துகளை எதிர்கொண்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் 75 ரன்களுடனும், 100 பந்துகளை எதிர்கொண்டுள்ள ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.