விசாரணை வளையத்தில் ஓ.பி.எஸ். - சிகிச்சை சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ எதிர்ப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட பலரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடந்துள்ளது.
2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறுமுகசாமியின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதன்பின்னர் மீண்டும் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்ததையடுத்து, 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு விசாரணை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக 154 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி முடித்து அனைவரது பதில்களும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த 12ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
பல முறை ஆணையம் ஓபிஎஸ்க்கு சம்மன் அனுப்பியும் அவர் ஒரு முறை கூட நேரில் ஆஜராகாமல் இருந்தார். இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அவர், 9வது முறையாக அனுப்பப்பட்ட பிறகு நேற்று நேரில் ஆஜரானார்.
அப்போது, விசாரணையில், எந்த விவரமும் எனக்குத் தெரியாது என்றும், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றும் 2-வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். விசாரணையில், மருத்துவ சார்ந்த கேள்விகளுக்கு, சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கப்பட்டது என தனக்கு தெரியாது என்று ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் ஜெயலலிதா நன்றாக இருப்பதாக சசிகலா ஒருசில முறை தன்னிடம் சொன்னதாகவும், தொடர்ந்து அவர் நன்றாக இருப்பதை பொதுவெளியில் கூறாமல் சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன் என்றார்.
அரசுப்பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் சொல்லவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நேற்று முதல் நாளில் 3 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், ஓ.பி.எஸ்ஸிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்நிலையில், விசாரணயின்போது ஓபிஎஸ்ஸிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்கும்போது, மருத்துவர்கள் உடன் இருக்கவேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.