ஜெயலலிதா சிகிச்சை விவகாரம் - ‘எனக்கு ஒன்றுமே தெரியாது... நான் சொந்த ஊரில் இருந்தேன்..’ - ஓ.பி.எஸ். வாக்குமூலம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட பலரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடந்துள்ளது.
2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறுமுகசாமியின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதன்பின்னர் மீண்டும் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்ததையடுத்து, 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு விசாரணை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, இன்று காலை ஓபிஎஸ் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சைகள் எல்லாம் வழங்கப்பட்டது? என்ற கேள்வி கேட்டப்பட்டது.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த வாக்குமூலத்தில் -
மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளித்தார்கள், எதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் கூட எனக்கு தெரியாது.
அப்போது நான் எனது சொந்த ஊரில் இருந்தேன். நள்ளிரவில் உதவியாளர் என்னை தொடர்பு கொண்டு, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து, மறுநாள் பிற்பகலில் நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன் என்றார்.
விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியது யார்? என்ற கேள்வி ஓ.பி.எஸ்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது ஓபிஎஸ், பொது மக்களின் கோரிக்கை அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது என்றார். மேலும், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் இருந்தது மட்டுமே எனக்கு தெரியும். வேறு என்னென்ன உடல் உபாதைகள் இருந்தது என்று எனக்கு ஒன்றுமே தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.