என்னுடைய ரோல் மாடல் எப்போதும் அம்மையார் 'ஜெயலலிதா' தான் - பிரேமலதா விஜயகாந்த்!
பெண் தலைவர்களில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள்தான் என்னுடைய ரோல் மாடல் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க.வின் பொதுக்குழு - செயற்குழுக் கூட்டம் 14ம் தேதி விஜயகாந்த் முன்னிலையில் நடந்தது. அந்த கூட்டத்தில் அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள்தான் என்னுடைய ரோல் மாடல் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பெண் தலைவராக வரும்போது, ஏற்கனவே எம்.ஜி.ஆர் ஆட்சி செய்து, அந்த ஆட்சியோடுதான் ஜெயலலிதா அவர்கள் அந்த பதவிக்கு வந்தார். இப்போது மு.க.ஸ்டாலின் அவர்களும் சரி, உதயநிதி அவர்களும் சரி வெற்றியின் முகத்தில்தான் அவர்கள் பதவிகளை எடுத்திருக்கிறார்கள்.
பேட்டி
ஆனால் சரிவிலும், தோல்வியிலும் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் தேமுதிகவின் பொதுச்செயலாளராக, எங்கள் கழகம் இந்த அங்கீகாரம் கொடுத்திருப்பதை நான் மிகப்பெரிய ஒரு சவாலாக எடுத்துக்கொள்கிறேன்.
நிச்சயமாக தலைவர் விஜயகாந்தை ஏற்றுக்கொண்ட அத்தனை பேரும் என்னையும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற உறுதி என்னிடம் உள்ளது. பெண் தலைவர்களில் உங்களின் ரோல் மாடல் யார்? என்று யார் என்னிடம் கேட்டாலும் அம்மையார் ஜெயலலிதா அவர்களைத்தான் நான் எப்போதும் சொல்வேன். இதை அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே கூறியிருக்கிறேன். அதேபோல் இந்திய அளவில் அம்மையார் இந்திராகாந்தி அவர்களை நான் சொல்லியிருக்கிறேன்.