ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு - அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓய்வு!
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா இன்று பணி ஓய்வுபெற்றார். கர்நாடக மாநில பார் கவுன்சில் உறுப்பினர்களும், பெங்களூரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டவர்களும் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியதை நினைவு கூர்ந்தார். எம்.பி, எம்.எல்.ஏ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக குன்ஹா சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்று அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் அவரை பாராட்டினார்கள்.
குன்ஹா மங்களூரைச் சேர்ந்தவர். இவர் 1985ம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். 2002ம் ஆண்டு மாவட்ட நீதிபதியானார். அதன் பிறகு பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் தான் குன்ஹா ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்தார். 2016ம் ஆண்டு பெங்களூரு உயர் நீதிமன்ற அவர் நீதிபதியாகி இப்பொழுது அவர் ஓய்வுபெற்றுள்ளார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க தனிநீபதியாக குன்ஹா நியமிக்கப்பட்டு, 2003ம் ஆண்டு முதல் இவ்வழக்கை விசாரித்து வந்த குன்ஹா, 18 ஆண்டுக்குப் பிறகு, 2014ம் ஆண்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1991-1996 ஜெயலலிதா முதன் முறையாக முதலமைச்சராக பதவி வகித்தார்.
பதவி வகித்துக் கொண்டிருந்த விரைவிலேயே ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என தீர்ப்பில் குறிப்பிட்டார். அதனையடுத்து, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை ஜெயலலிதா மறைவுக்குப் பின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மற்ற மூவரும் பெங்களூரு அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தனர். சசிகலா, இளவரசி விடுதலையான நிலையில், சுதாகரனுக்கு தண்டனைக் காலம் இன்னும் முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.