ஜெயலலிதா மரணம் : விசாரணை வளையத்தில் முதன் முறையாக ஆஜராகிறார் ஓபிஎஸ்

ops jayalalithaadeath appearcommission
By Irumporai Mar 20, 2022 11:16 AM GMT
Report

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட பலரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடந்துள்ளது. 

2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறுமுகசாமியின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதன்பின்னர் மீண்டும் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்ததையடுத்து, 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு விசாரணை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

இந்த நிலையில்  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மார்ச் 21ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. சசிகலாவின் உறவினர் இளவரசியும் அன்றையதினம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக நாளை விசாரணைக்கு ஆஜராக உள்ளார். காலை 10.30 மணியளவில் இளவரசி ஆஜராகிறார். அதன்பின்னர் 11.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிறார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து குற்றச்சாட்டுக்களையும், சந்தேகங்களையும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இது தொடர்பாக நாளைய விசாரணையின்போது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.