ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை கண்டறியாமல் நினைவிடம் திறக்க என்ன யோக்கியதை இருக்கிறது: ஸ்டாலின்

political tamilnadu politician
By Jon Jan 28, 2021 10:59 PM GMT
Report

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தையும் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள வேதா இல்லத்தையும் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிலையில் 'ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க முடியாத உங்கள் இருவருக்கும் நினைவு மண்டபத்தை திறந்து வைக்க என்ன யோக்கியதை இருக்கிறது' என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

வன்னியர் சமுதாயம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 20 சதவீத இடஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது.

இடஒதுக்கீடு கேட்டுப் போராடி - உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், உதவித் தொகையை?ம் அளித்தது தி.மு.க. ஆட்சி. தமிழ்நாட்டில் முதன்முதலில் டி.ஜி.பி.யாக ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த கட்சி தி.மு.க. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சி தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கவில்லை.

இங்கே ஊழல் காட்சி நடைபெற்று வருகிறது. படித்து விட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். சிறு, குறு தொழில்கள் எல்லாம் நலிவடைந்து விட்டன. அ.தி.மு.க. அமைச்சர்கள்- முதலமைச்சர் அனைவருமே மக்களை இந்தப் பத்தாண்டில் ஏமாற்றி விட்டார்கள். தினம் ஒரு தகவல் போல் - தினம் ஒரு பொய் சொல்வது முதலமைச்சர் பழனிசாமிக்கு வாடிக்கையாகி விட்டது. காரணம், அவரிடம் சாதனைகளைச் சொல்ல சரக்கு இல்லை.

ஆகவே பொய் சொல்லி மக்களைக் குழப்பலாம், ஏமாற்றலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார். நேற்றுக்கூட ஜெயலலிதா நினைவிடம் திறப்பதை, பினாமிகள் மூலம் வழக்குப் போட்டுத் தடுத்தவர் ஸ்டாலின் என்று ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார். பினாமிகளை வைத்து ஊழல் செய்வது, பழனிசாமிக்குக் கைவந்த கலை.

பினாமிகள் பெயரில் டெண்டர் விடுவது பழனிசாமிக்குப் பழக்க தோஷம். ஆனால் தி.மு.க. என்றைக்குமே நேரில் எதிர்க்கும் இயக்கம். தவறு என்றால் அதை நெஞ்சுரத்துடன் தட்டிக் கேட்கும் இயக்கம் இது. அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிப்போம் என்று விசாரணை ஆணையம் அமைத்த முதலமைச்சர் பழனிசாமியும், அது பற்றிக் கண்டு கொள்ளவில்லை; தர்மயுத்தம் நடத்தி ஆணையம் கேட்ட ஓ.பன்னீர்செல்வமோ - விசாரணைக்கே போகவில்லை.

அதனால்தான், 'ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க முடியாத உங்கள் இருவருக்கும் நினைவு மண்டபத்தை திறந்து வைக்க என்ன யோக்கியதை இருக்கிறது' என்று நான் நேரடியாகவே கேட்டேன். இன்றுவரை அதற்கு பதில் சொல்லத் துப்பு இல்லாத, வக்கு இல்லாத பழனிசாமி ஏதேதோ உளறுகிறார்” என்றார்