ஜெயலலிதாவின் வேதா நினைவு இல்லத்தை தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா நிலையம்' நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்க இருக்கிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அதிமுகவின் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி, வேதா இல்லத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார். இந்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டனர்.
அதனையடுத்து வீட்டிற்கு வர்ணம் தீட்டப்பட்டது. ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்றன. இந்நிலையில், நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள வேதா நிலையம் இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்க இருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க உள்ளார். மேலும், இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.