ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு - என் சித்தி மீது பழி போட்டார்கள்... - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த ஆறுமுகசாமி ஆணையம், தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கி இருக்கிறது.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் கடந்த 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இல்லாமல் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் நாள் அவர் உயிரிழந்தார்.
இதுவரை ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக 150 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அந்த மருத்துவர் கொடுத்த வாக்குமூலத்தில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைசுற்றல், மயக்கம், துணையின்றி நடக்க முடியாத அளவிற்கு அவருக்கு பிரச்சினை இருந்ததாகவும், தனக்கு ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக பேசினார் என்றும், மருத்துவர்கள் பரிந்துரைத்தும் அவர் ஓய்வெடுக்க மறுத்தார் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளரை டிடிவி தினகரன் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது -
உடல்நலக்குறைவால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தார் என்பது தான் உண்மை. ஜெயலலிதாவின் மரணம் அரசியலாக்கப்பட்டுள்ளது. எந்த முடிவாக இருந்தாலும் ஜெயலலிதாவே எடுத்திருப்பார். தேவையில்லாமல் எங்கள் சித்தி மீது பழிபோட்டு எதோ பண்ணிப் பார்த்தார்கள். அது நடக்கவில்லை. இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.