திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்குக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்

admk dmk jayalalitha rsbarathi
By Praveen Apr 23, 2021 12:29 PM GMT
Report

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியதற்காக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ம் ஆண்டு நவம்பர் 2 ம் தேதி சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி அவர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவதூறு வழக்கு மீதான விசாரணை தற்போது எம்.பி எம்.எல்.ஏ க்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரியும் ஆர்.எஸ் பாரதி தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர் எஸ் பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,

முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவர் செய்ய வேண்டிய மக்கள் பணி குறித்தே பேசியதாகவும், ஜனநாயக ரீதியாக விமர்சிக்க உரிமை உள்ளதாகவும்,தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவில்லை எனவும் வாதிட்டார்.

மேலும் ஜனநாயக ரீதியாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்க உரிமை உள்ளது என கூறி ஆர் எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து வழக்கு குறித்து அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, மேலும் வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.