"மக்களால் நான்..மக்களுக்காகவே நான்" - ஜெயலலிதா என்னும் ஆளுமையின் 5-ம் ஆண்டு நினைவு நாள்

admk jayalalitha amma puratchi thalaivi
By Thahir Dec 05, 2021 06:37 AM GMT
Report

‘அம்மா’என அனைத்து தரப்பு மக்களாலும் அன்போடு அழைக்கப்படுவர் மறைந்த தமிழக முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதா. அதிமுக எனும் கோட்டையை இரும்புக்கரம் கொண்டு காத்து வழி நடத்தியவர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஜெயலலிதா 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் ஜெயராம் -வேதவல்லி தம்பதியருக்கு கோமளவல்லியாக பிறந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே தந்தை ஜெயராம் இறந்துவிட அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த அவரது தாயார், வேதவல்லி என்னும் தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார்.

"மக்களால் நான்..மக்களுக்காகவே நான்"  -  ஜெயலலிதா என்னும் ஆளுமையின் 5-ம் ஆண்டு நினைவு நாள் | Jayalalitha Amma Admk 5Th Ninaivu Naal Makkalalnan

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஜெயலலிதாவிற்கு படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் படிப்பைக் கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தில் விதவை பெண்ணாக நடித்ததின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

"மக்களால் நான்..மக்களுக்காகவே நான்"  -  ஜெயலலிதா என்னும் ஆளுமையின் 5-ம் ஆண்டு நினைவு நாள் | Jayalalitha Amma Admk 5Th Ninaivu Naal Makkalalnan

மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ள ஜெயலலிதா தனது அசாத்திய நடிப்பால் கலைச்செல்வி என்ற பட்டத்தை வென்றெடுத்து ஏராளமான ரசிகர்களையும் கவர்ந்தார்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் கொள்கையை ஏற்று அரசியலில் கால் பதித்த ஜெயலலிதா 1982 ஜூன் 4ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற விழாவில் அதிமுகவில் இணைந்து அப்போதே அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரை தவிர்த்து மற்ற மூத்த தலைவர்களின் அங்கீகாரம் ஜெயலலிதாவிற்கு அப்போது கிடைக்கவில்லை என்றாலும் கட்சிக்காக தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார்.

ஆங்காங்கே நடக்கும் சிறு சிறு தவறுகளையும் தலைமைக்கு கொண்டு சென்று திட்டத்தை வகுத்தால் போதாது அவற்றை கவனிக்கவும் தவறக்கூடாது என எம்.ஜி.ஆருக்கே போதித்தார் ஜெயலலிதா. 1984 மார்ச் 24ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்று நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் அப்போதய பிரதமராக இருந்த இந்திராகாந்தி உள்பட பல தலைவர்களை கவர்ந்தார்.

எம்.ஜி.ஆரின் இறுதிகாலத்தில் கட்சியில் இருந்து ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா தனது விடா முயற்சியால் கட்சி இரண்டாக பிரிந்த போதும் அதனை ஒன்று சேர்த்து 1989 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக சட்டப்பேரவையில் அமர்ந்தார்.

அங்கு நடைபெற்ற மோதலின்போது ‘‘தி.மு.க உறுப்பினர்கள் எனது புடவையை இழுத்தார்கள். இந்தச் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.

சட்டமன்றாம எப்பொழுது பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறுகிறதோ அப்பொழுதுதான் சட்டமன்றத்துக்குள் வருவேன்”என்று கூறிச்சென்றதை போலவே ஜெயலலிதா மீண்டும் முதல்வராகவே சட்டசபைக்குள் நுழைந்தார், 1991 ஜூலை 24ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இவர் முதல்வராக இருந்த 1991–1996 பதவிக் காலத்தில் பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறைகொண்டு பல நல்ல திட்டங்களைக் தமிழகத்தில் கொண்டு வந்தார். அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் இவர் மீது ஊழல் புகார்களை அடுக்கவும் தவறவில்லை. அதற்காக பலமுறை ஜெயில் தண்டனையும் அனுபவித்தார்.

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுகவை அங்கம் வகிக்க செய்தவர் ஜெயலலிதா. 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37இல் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.

"மக்களால் நான்..மக்களுக்காகவே நான்"  -  ஜெயலலிதா என்னும் ஆளுமையின் 5-ம் ஆண்டு நினைவு நாள் | Jayalalitha Amma Admk 5Th Ninaivu Naal Makkalalnan

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227இல் நேரடியாகவும், 7இல் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.

1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016இல் தான். இவையனைத்திற்கும் ஜெயலலிதா எனும் ஆளுமையே காரணகர்த்தாவாக இருந்தது.

1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார்.

2015 மே 23 முதல் இறக்கும் வரையில் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ள ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி சிகிச்சைப்பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மீது பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் பலரால் பல சமயங்களில் வைக்கப்பட்டு இருந்தாலும்,, எப்படி ஒரு தனி பெண் அதிமுக என்னும் மாபெரும் கட்சியை தனியாளாக வழிநடத்தி சென்றார்?

ஆணாதிக்கம் கொண்டுள்ள தமிழக அரசியலில் தனி ஒருத்தியாக எப்படி இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்? என இன்றும் பலரையும் வியப்பில் ஆழ்த்தி அரசியலில் கால் பதிக்க நினைக்கும் பெண்மணிகள் பலருக்கும் இன்றளவும் முன்மாதிரியாக திகழ்கிறார்.