Viral Video...1989-இல் நடந்த சம்பவம்? ஜெயலலிதாவே நேர்காணலில் சொன்ன விஷயம்
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு வகையிலான விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், ஜெயலலிதாவே நேர்காணல் ஒன்றில் அது குறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
ஜெயலலிதா விவகாரம்
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1889-இல் தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதாக பேசிய நிலையில், தற்போது அது தமிழக அரசியலை வட்டாரத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.
ஜெயலலிதாவே சொன்னது
இந்நிலையில் தான், தற்போது பழைய நேர்காணல் ஒன்றில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே இது குறித்து பேசியிருப்பது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.அந்த நேர்காணலில், நெறியாளர், "உங்கள் வாழ்க்கையில் உங்களை மிகவும் காயப்படுத்திய சம்பவம் ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்து பேசிய ஜெயலலிதா, வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை பார்த்திருக்கிறேன் என குறிப்பிட்டு ஆனால் தன்னை காயப்படுத்திய சம்பவம் இதுதான் என்று 1989-இல் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். மார்ச் 25-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவராக தான் இருந்த போது, தன் மீது சட்டமன்றத்துக்கு உள்ளேயே பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது என நினைவு கூர்ந்த அவர், அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுக எம்எல்ஏக்கள் தன்னை தாக்கினார்கள் என்றார்.
தன் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கருணாநிதியின் இரண்டு மனைவிகளும் விஐபி அறையில் இருந்து பார்த்தார்கள் என்றும் திமுக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தான் மீது கையில் கிடைத்த புத்தகங்கள், மைக்குகளை வீசியும் தன் தலைமுடியை பிடித்து இழுத்தார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.
அப்போது சிலர் தன்னுடைய சேலையையும் இழுத்தார்கள் என குறிப்பிட்ட அவர், அதில் தனது சில தலைமுடிகள் பிய்த்து எறியப்பட்டன எனவும் கூறினார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாக பரவி வருகின்றன.