சிகிச்சைக்கு பணமின்றி தவித்த நடிகை ஜெயக்குமாரி - நேரில் சந்தித்து உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Tamil nadu Ma. Subramanian
By Nandhini Sep 19, 2022 05:45 AM GMT
Report

சிகிச்சைக்கு பணமின்றி தவித்த பழம்பெரும நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்,

பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி

அந்த காலத்தில் கவர்ச்சி உடைகள் அணிந்து, தன் அழகால் ரசிகர்களை வசீகரித்தவர்தான் நடிகை ஜெய்குமாரி. இவர் தமிழில் நூற்றுக்கு நூறு, எங்கிருந்தோ வந்தாள், வைரம், ரிக்‌ஷாக்காரன், தேடி வந்த லக்ஷ்மி, மாணிக்கத் தொட்டில், இவள் ஒரு சீதை, பிஞ்சு மனம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்குத் திரைப்படங்களில் பல படங்களில் டான்ஸ்ராக நடித்துள்ளார். தற்போது நடிகை ஜெயக்குமாரி மிகுந்த வறுமையில் வாடுகிறார். நடிகை ஜெயக்குமாரிக்கு 70 வயதிற்கு மேலாகிறது. ஒரு சின்ன வாடகை வீட்டில் தன் மகனுடன் வசித்து வருகிறார்.

நடிகை ஜெயக்குமாரி பேட்டி சமீபத்தில் ஒரு சேனலுக்கு நடிகை ஜெயக்குமாரி பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியில் -

நான் நடித்து சம்பாதித்த பணத்தில் என் 2 தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்தேன். ஆனால் யாரும் இப்போது எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. என்னுடைய 25 வயதில் அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்தேன். எங்களுக்கு சஜிதா, பானு என்ற 2 மகள்களும், ரோஷன் என்ற ஒரு மகனும் பிறந்தனர். என் கணவர் இறந்த பிறகு, என் வாழ்க்கை சோதனைக்குள்ளாகிவிட்டது.

கணவருக்கு சொந்தமான பெரிய வீட்டை கடனுக்காக எடுத்துக் கொண்டார்கள். நான் வைத்திருந்த கார்களை விற்று என்னுடைய இரண்டாவது மகள் பானுவுக்கு திருமணம் செய்து வைத்தேன். 2 மகள்களும் என்னை இப்போதுவரை கவனிக்கவும் இல்லை. எந்த உதவியும் செய்யவில்லை. நானும் என் மகனும் வேளச்சேரியில் உள்ள ரூ. 750க்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.

சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் நடிகை ஜெயக்குமாரி

தற்போது நடிகை ஜெயக்குமாரிக்கு 2 சிறுநீரகங்களும் செயலிழந்து அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், உயிருக்கு போராடி வரும் ஜெயக்குமாரியின் நிலையை அறிந்து நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து கமெண்ட் செய்து வந்தனர். மேலும், நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் அவருக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்

இந்நிலையில், நடிகை ஜெயக்குமாரி சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பது குறித்து அறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது, அவரிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவருக்கு வீடு மற்றும் உதவித்தொகை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், ஜெயக்குமாரிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் நடிகை ஜெயக்குமாரியை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.   

jayakumari-ma--subramanian