ஜெயக்குமார் சொன்ன கருத்து - அதிர்ச்சியில் அதிமுக தலைமை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவின் தலைமை பதவி குறித்து தெரிவித்த கருத்து மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சேலத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அதிமுக கட்சி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதல்கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் எந்தவித விதிமுறைகளும் இல்லை. முதலில் தலைமையை தேர்ந்தெடுத்த பின் பிறகு தான் மற்ற அனைத்து கிளை மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க முடியும். இதுதான் விதி.அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் அரசியல் வியாபாரிகள்.
அதிமுக பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது. ஜெயலலிதாவிற்குப் பிறகு கட்சி இருக்காது எனக் கூறினார்கள். ஆனால் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக சிறப்பாகச் செயல்படுகிறது. சட்டசபைத் தேர்தலில் ஒரு கோடியே 44 லட்சம் வாக்குகள் வாங்கி இருக்கிறோம்.
தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தருகிறார்கள். இதைத் தாங்க முடியாமல் சிலர் வேண்டும் என்று புரளி கிளப்பி விடுகிறார்கள்.உடலில் அதிமுக ரத்தம் ஓடுபவர்கள் எந்த காலத்திலும் அதிமுகவை விட்டுப் போக மாட்டார்கள்.
தொண்டர்களால் உருவான கட்சி அதிமுக. அதிமுகவின் சொத்து தொண்டர்களும், பொதுமக்களும் தான். தொண்டர்களும், பொதுமக்களும் இருப்பதால் அதிமுகவை அசைக்க முடியாது. யாரோ சிலர் கட்சிக் கொடியைப் பயன்படுத்துகிறார்கள் பொதுச்செயலாளர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் தலைவராகிவிட முடியாது என்றார்.
மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் அதிமுக கூட்டணியில் அதே நிலையில் நீடிக்கிறது. யார் வந்தாலும் அரவணைத்துக் கொண்டு செல்வோம். கூட்டணிக்கு வருவதும்., வராததும் அவர்களுடைய விருப்பம் என ஜெயக்குமார் கூறினார்.
தற்போதைய சூழலில் அதிமுகவின் தலைமை இருக்கையை அலங்கரிப்பது யார்? என்கிற மறைமுக போர் முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே நடந்து வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
