பாஜக கூட்டணியால் அதிமுகவில் இருந்து விலகலா? ஜெயக்குமார் விளக்கம்
பாஜக கூட்டணியால் அதிமுகவில் இருந்து விலகுவதாக வெளியான தகவலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி
அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து 2021 சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இதனையடுத்து, அன்றைய பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிமுக தலைவர்கள் மீதான விமர்சனத்தால், இந்த கூட்டணி கடந்த 2023 ஆம் ஆண்டு முறிந்தது.
தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. கடந்த வாரம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த கூட்டணியை திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பாஜக உடன் கூட்டணி அமைந்தால், அதிமுகவிலிருந்து விலகுவதாக ஜெயக்குமார் கூறினார் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.
ஜெயக்குமார் விளக்கம்
இந்நிலையில் இன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில், அம்பேத்கர் உருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், திருமாவளவன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை. இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி.
எங்களின் குடும்பம் 75 ஆண்டு காலம் திராவிட பாரம்பரியம் கொண்டது. பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் இந்த ஜெயக்குமார் நின்றதில்லை. என்னை அடையாளம் காட்டியது, அதிமுகவும், எம்ஜிஆர், ஜெயலலிதாவும் தான்.
பதவி என்பது தோளில் போட்ட துண்டு என்றார் அண்ணா. ஆனால், என்னை பொறுத்தவரையில் அது ஒரு கர்ச்சீப் தான். உயிர்மூச்சு உள்ளவரை அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில்தான் இருப்பேன்" என பேசினார்.