சிறையில் இருக்கும் ஜெயக்குமாரை திடீரென சந்தித்த ஓ.பி.எஸ்
கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது, திமுக பிரமுகர் ஒருவர் கள்ளநோட்டு போட முயற்சி செய்வதாக கூறி, அவரை அடித்து அரைநிர்வாணமாக்கி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஊர், ஊராக இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இது தொடர்பாக ஜெயக்குமார் மீது தண்டையார் பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், பட்டினப்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் அதிரடியாக கைது செய்தனர்.
இதனையடுத்து, ஜெயக்குமார் மீது தமிழக அரசு உத்தரவை எதிர்த்து நோய் பரப்பும் செயலில் ஈடுபடுதல், தொழிற்சாலை அபகரிப்பு விவகாரம் உள்ளிட்ட 2 புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் மீது மொத்தம் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதில், ஒரு வழக்கில் மட்டும் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.
ஜெயக்குமார் கைது விவகாரம் திமுகவின் பழிவாங்கும் நோக்கத்தை குறிக்கிறது. எனவே, திமுக அரசைக் கண்டித்தும், ஜெயக்குமார் கைதை கண்டித்தும் அதிமுக தலைமை கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஓ.பன்னீர்செல்வத்துடன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதற்கு முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஜெயக்குமாரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.