முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாள் சிறை - அதிரடி காட்டிய போலீசார்
கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, வண்ணாரப்பேட்டை 49-வது வார்டில் திமுக பிரமுகர் நரேஷ் என்பவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக அதிமுகவினர், பாஜகவினர் அங்கு வந்து அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பானதால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது, அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நரேஷை தாக்கி அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கூட்டிச் சென்றதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நரேஷ் தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் அதிமுகவினர் மீது போலீசார் 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்றிரவு பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜார்ஜ்டவுன் 15வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முரளி கிருஷ்ணா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்துஜெயக்குமாரை நீதிமன்ற 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிமுகவினரிடம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.