அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லது - சசிகலாவுக்கு அட்வைஸ் சொன்ன ஜெயக்குமார்
தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது சரிதான் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சசிகலா தரப்பு முடிவு செய்துள்ளது.
நேற்றைய தினம் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சசிகலா இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தார். அதேசமயம் தீர்ப்பை வரவேற்று அதிமுக கட்சி அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் வைத்தியலிங்கம், செங்கோட்டையன், வேலுமணி, சி.வி.சண்முகம், வளர்மதி, பொன்னையன் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து உரிமையியல் நீதிமன்றம் என்று வழங்கிய தீர்ப்பு குறித்து விவாதித்தனர்.
இதனைத் தொடந்து கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கழக அமைப்புத் தேர்தல் நடைபெறக் கூடிய சூழலில் தொண்டர்கள் கட்டுப்பாடோடு இருக்கக்கூடிய இயக்கமாக அதிமுக இருந்து வருகிறது.
அதிமுகவை கைப்பற்றும் முயற்சி சசிகலாவிற்கு தொடர்ந்து தோல்வியை கொடுத்து வரும் நிலையில், அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது நல்லது எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.