எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள் - ஜெயக்குமார் பேட்டி
சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன.
மேலும், தி.மு.க., பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு ஜாமீ்ன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டதால், அவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது .
மேலும் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் வழக்குகளில் கைதாகி நிபந்தனை ஜாமினில் விடுதலையான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இன்று 2-வது நாளாக நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடாது என்று திமுக நினைக்கிறார்கள். அதிமுகவை அழித்து விடலாம் என்றுதான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.