"12 மணி நேரத்தில் உருவாகிறது ஜாவத் புயல் " - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

Javat storm Indian Meteorological Center
By Nandhini Dec 03, 2021 03:56 AM GMT
Report

டிசம்பர் 2-வது வாரத்தில் மற்றொரு தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -

வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை மதுரை, விருதுநகர் ,திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும்.

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். அத்துடன் மழையானது வருகிற 6ம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் ,தர்மபுரி ,ஈரோடு, தேனி ,மதுரை, சிவகங்கை, விருதுநகர் ,திருப்பூர் ,திண்டுக்கல் மாவட்டங்களில் பெய்யும்.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக மாறி மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும்.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே நாளை கரையை கடக்கக்கூடும். இந்நிலையில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெற உள்ளது.

அதேபோல் அந்தமான் அருகே வங்கக் கடலில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தமிழகம் நோக்கி நகரும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பில்லை.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

"12 மணி நேரத்தில் உருவாகிறது ஜாவத் புயல் " - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை | Javat Storm Indian Meteorological Center