ஐபிஎல்லில் விளையாடுவாரா பும்ரா? அணியில் இணைவது எப்போது?
பும்ரா ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஐபிஎல் தொடர்
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18வது ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் 5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 6 வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல்லில் ஆரமபத்தில் நடைபெறும் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியில், காயமடைந்த பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை. தற்போது குணமடைந்து வரும் அவர், ஏப்ரல் முதல் வாரத்தில், அணியில் இனைந்து கொள்வார் என கூறப்படுகிறது.
இதனால், மார்ச் 23 அன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும், மார்ச் 29 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பும்ரா இடம்பெற வாய்ப்பில்லை.
ஹர்திக் பாண்டியாவிற்கு தடை
2024 ஐபிஎல் தொடரில், மும்பை அணி தனது கடைசி போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிராக மெதுவான ஓவர் வீசியதால், கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.
இதனால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவும் இடம்பெற மாட்டார் என்பதால் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.