உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் இவர் தான் - இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய பிரபலம்
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் புகழ்ந்து பேசியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன.
இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை பார்க்க ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்?, எந்த வீரர் சிறப்பாக செயல்படுவார்? போன்ற கருத்துக்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.
இந்திய அணிக்காக பும்ரா பல முறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த போதும் மிக சிறந்த முறையில் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். என்னைப் பொருத்தவரை அனைத்து விதமான தொடரிலும் மிகச் சிறந்த முறையில் பந்து வீச கூடியவர் பும்ரா தான். உலகின் தலைசிறந்த நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரும் அவர் தான் என கூறியுள்ளார்.
மேலும் பும்ராவிற்கு எப்படிப்பட்ட மைதானத்தில் எந்த மாதிரி பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பது நன்றாக தெரியும். டெஸ்ட் போட்டிகளில் இவர் விராட் கோலிக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கிறார் எனவும் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.