மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் கைது - நிம்மதியடைந்த இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்
ஓவல் டெஸ்டில் மீண்டும் களத்திற்குள் புகுந்து இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் ஜெர்சியுடன் ஃபீல்டிங் செய்ய வந்த ஜார்வோ என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய ரசிகர், லீட்ஸ் டெஸ்டில் ஒருபடி மேலே போய் கையில் பேட்டுடன் இந்திய அணிக்காக பேட்டிங் செய்ய வந்தார்.
அவரது காமெடி ரசிக்கத்தக்க வகையில் இருந்தாலும் மைதானத்தில் வீரர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. லீட்ஸ் மைதானத்தில் ஜார்வோ நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டதால் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் குறும்புதனத்தில் ஈடுபட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வழக்கம்போல ஓவல் டெஸ்டிலும் அவர் களம் புகுந்தார்.
இந்த போட்டியில் பந்துவீச்சாளரை போன்று வேகமாக களத்திற்குள் ஓடி வந்து வந்த வேகத்தில் இங்கிலாந்து வீரர் பாரிஸ்டோ மீது மோதினார். இதனையடுத்து மைதான ஊழியர்கள் ஜார்வோவை வெளியேற்றிய நிலையில் அவரை லண்டன் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.