உக்ரைனில் போர் பதற்றம் - ஜப்பான், பிரிட்டன் பிரதமர்கள் தீவிர ஆலோசனை
உக்ரைனில் போர் பதற்றத்தை தணிப்பதற்கான முயற்சியில் ஜப்பான், பிரிட்டன் பிரதமர்கள் தீவிர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ள நிலையில் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியதால் இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை கொண்ட தனது படைகளை குவித்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.
ஒருவேளை ரஷ்யா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, நேட்டோ படைகள் தெரிவித்தன. இதனால், ரஷ்யா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்தது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அதில் உக்ரைன் விவகாரத்தில் போர் பதற்றத்தை தணிப்பதற்கான முயற்சியில் இருநாடுகளும் இணைந்து செயல்பட போவதாகவும், உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான தங்கள் நிலையான ஆதரவை இருநாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.