களைக்கட்டிய ஒலிம்பிக் திருவிழா - டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி இன்று முதல் தொடக்கம்!
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஈடில்லா ஈர்ப்பு சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு. மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 1896-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
உலக போர் காரணமாக 3 முறை ரத்தானது. கடைசியாக 2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி அரங்கேறியது.
இந்த நிலையில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டே இந்த போட்டி நடந்திருக்க வேண்டியது.
கொரோனா பரவல் காரணமாக முதல் முறையாக ஓராண்டுக்கு ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஆஸ்திரேலியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்கு மோதுகிறார்கள். இந்திய தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 125 வீரர், வீராங்கனைகள் டோக்கியோவுக்கு படையெடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக அரங்கத்தில்
ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.