வெளிநாட்டினர் ஜப்பான் வர தடை : ஓமிக்ரான் குறித்த அச்சம் காரணமாக அதிரடி அறிவிப்பு

அனைத்து வெளிநாடு பயணிகளுக்கும் தடை விதிப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளிடையே கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் தான் எந்தவொரு நாட்டினாலும் வைரஸ் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடிவதில்லை. 

ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகையைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இதனை கவலைக்குரிய கொரோனா வகையாக உலக சுகாதார அமைப்பு சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இருப்பினும், தற்போது வரை ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்றே ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். 

இதனால் முன்னெச்சரிக்கையாக பல நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும், இஸ்ரேல் நாடு ஒட்டுமொத்தமாக அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலைத் தொடர்ந்து ஜப்பானும் அனைத்து வெளிநாடு பயணிகளுக்கும் தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இந்த புதிய தடை வரும் நவம்பர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார். கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதலே பெரும்பாலான காலம் வெளிநாட்டினருக்கு ஜப்பான் தனது எல்லையை மூடியே வைத்திருந்தது.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போதிலும் கூட வெளிநாடு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வீரர்களுக்கும் கூட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தான் ஓமிக்ரான் உருமாறிய கொரோனா காரணமாக மீண்டும் தனது எல்லையை இறுக்கி மூடியுள்ளது ஜப்பான். ஏற்கனவே, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து ஜப்பான் வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்