உலகின் முதல் 3D பிரிண்டிட் ரயில் நிலையம் - 6 மணி நேரத்தில் உருவாக்கி சாதனை
ஜப்பானில் 6 மணி நேரத்தில் உலகின் முதல் 3D பிரிண்டிட் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
3D பிரிண்ட் ரயில் நிலையம்
பொதுவாக ரயில் நிலையங்களில் கட்டுமான பணிகள் நடைபெறும் போது, சில மாதங்களாவது நடைபெறும். கட்டுமான பணிகள் நடைபெறும் காலத்தில், அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும்.
ஆனால், ஜப்பானில் ரயில் போக்குவரத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், இரவு கடைசி ரயில் சென்ற பிறகு ரயில் நிலைய கட்டுமான பணியை தொடங்கி மறுநாள் காலை முதல் ரயில் வரும் முன், 6 மணி நேரத்தில் ரயில் நிலையத்தை கட்டி முடித்துள்ளனர்.
ஆனால் இந்த ரயில் நிலையம் 3D பிரிண்ட் தொழில்நுட்பத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உலகில் 3D பிரிண்ட் தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டுள்ள முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை இந்த ரயில் நிலையம் பெற்றுள்ளது.
ஜப்பான்
மேற்கு ஜப்பானின் வகயாமா மாகாணத்தில் உள்ள ஹட்சுஷிமா ரயில் நிலையம்(Hatsushima Station) 1948 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
இந்த ரயில் நிலையத்தில் உள்ள ஒற்றை ரயில் பாதையில், ஒரு மணி நேரத்திற்கு 1 முதல் 3 ரயில்கள் வந்து சென்றன. நாளொன்றுக்கு சுமார் 530 பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தினர்.
மரத்தால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்திற்கு மாற்றாக, 3D பிரிண்ட் தொழில்நுட்பம் மூலம் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டமிட்டனர்.
இதற்கான 3D பாகங்கள் ரயில் நிலையத்தில் இருந்து 500 மைல் தொலைவில் உள்ள தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அச்சிடப்பட்டு, மார்ச் 26 ஆம் தேதி ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அன்று இரவு 11:57 மணிக்கு கடைசி ரயில் புறப்பட்ட பின்னர், தொழிலாளர்கள் புதிய நிலையத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
6 மணி நேரம்
ராட்சத கிரேன் மூலம் அந்த 3D பாகங்களை ஒன்று சேர்த்து, மறு நாள் காலை முதல் ரயில் 5;45 மணிக்கு வருவதற்கு முன்னர் 6 மணி நேரத்தில் 100 சதுரடி அளவிலான இந்த ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
Japanese companies have built what they call the world's first 3D-printed railway station. pic.twitter.com/W3Plc8W2WU
— South China Morning Post (@SCMPNews) April 11, 2025
அதே நேரம், டிக்கெட் இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து அட்டை வாசகங்கள் போன்ற உட்புற வேலைகள் உள்ளதால் இந்த ரயில் நிலையம் ஜூலை மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் வயதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கட்டுமான பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை.
அதனால் இது போன்ற தொழில்நுட்பம் மூலம் குறைவான பணியாளர்களுடன், குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஜப்பான் முன்வந்துள்ளது.