மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மருத்துவ செலவை ஏற்றார் விஜய் சேதுபதி!
மாரடைப்பால் மரணம் அடைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மருத்துவ செலவு அனைத்தையும் விஜய் சேதுபதி ஏற்றுள்ளார். இயற்கை படம் மூலம் இயக்குநரான எஸ்.பி. ஜனநாதன் தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார். அவர் இயக்கிய ஈ, பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்கள் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோரை வைத்து லாபம் படத்தை இயக்கி முடித்தார் ஜனநாதன். லாபம் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை கவனித்து வந்த ஜனநாதன் கடந்த வியாழக்கிழமை வேலைக்கு வரவில்லை. இதையடுத்து உதவியாளர்கள் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சுயநினைவில்லாமல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அவரை க்ரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜனநாதனுக்காக திரையுலகினரும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்தார்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஜனநாதனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் வீட்டில் வைக்கப்பட்டது. விஜய் சேதுபதி தன் இயக்குநருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் ஜனநாதனின் மருத்துவ செலவு முழுவதையும் விஜய் சேதுபதி தற்போது ஏற்றுக் கொண்டுள்ளாராம்.
ஜனநாதனை மருத்துவமனையில் சேர்த்ததுமே, செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விஜய் சேதுபதி வாக்களித்துள்ளார். அதன்படி அவர் மொத்த மருத்துவ செலவையும் தற்போது ஏற்றிருக்கிறார்.