கோவை கார் வெடிப்பு; ஜமேசா முபினுக்குக்கும் இலங்கை குண்டு வெடிப்புக்கும் தொடர்பா?
கோவையில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள முகமது அசாருதினுக்கும் ஜமேஷா முபினுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கார் வெடித்த சம்பவம்
கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலை 4 மணிக்கு கார் ஒன்று வெடித்து சிதறியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.
காரில் பயணித்த ஒருவர் முற்றிலுமாக தீயில் எரிந்த நிலையில் கிடந்தார். அவரின் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் ராசாயன பொருட்கள் கண்டுபிடிப்பு
காரில் கருகிய நிலையில் இறந்தவர் குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில் 23 ஆம் தேதி இரவு இறந்த நபர் குறித்து கண்டறிந்தனர். உயிரிழந்தவர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்று தெரியவந்தது.
உக்கடம் ஜி.எம் நகர், கோட்டைப்புதுார் பகுதியைச் சேர்ந்த இவரிடம் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து இவரது வீட்டை சோதனை செய்த காவல்துறையில் வீட்டில் சில ரசாயன வெடிபொருட்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிக்குண்டு தயார் செய்யக்கூடிய சில பொருட்களையும் கைப்பற்றினர்.
5 பேர் கைது
இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி நேரில் விசாரணை மேற்கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 6 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
பின்னர், ஜமேசா முபீன் என்பவருடன் தொடர்பில் இருந்தவர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் புலன் விசாரணை செய்து வரும் நிலையில், 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), GM நகர் முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பா?
இதையடுத்து பாதுகாப்பு பணிகளுக்காக மாநகரம் முழுவதும் அதிவிரைப்பு படை போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே காரில் சிலிண்டர் வெடித்து இறந்து போன ஜமேசா முபினுக்கும் இலங்கை குண்டுவெடிப்பு கைதிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
2019 கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக கைதான 3 நபர்களில் ஒருவர் முகமது அசாருதீன்.
அவரை ஜமேசா முபின் கேரள சிறையில் சந்தித்து பேசியதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.