அரையிறுதி வெற்றியை கொண்டாடாத நியூசிலாந்து வீரர் - என்ன காரணம் தெரியுமா?
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதை அந்த அணி வீரர் நீஷம் கொண்டாடாமல் இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத நியூசிலாந்து இம்முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.
இதனிடையே சில தினங்களுக்கு முன் அபுதாபியில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி வெற்றி பெற்றப்போது பெவிலியனில் இருந்த நியூசிலாந்து வீரர்கள், பயிற்சியாளர், ஊழியர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். ஆனால் அங்கு அமர்ந்திருந்த ஜேம்ஸ் நீஷம் ஏதும் நடக்காதது போல் மிக அமைதியாக உட்கார்ந்தது இருந்தார். இது தொடர்பான புகைப்படம், வீடியோ வைரலானது. பலரும் இதனை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
இந்த நிலையில் ஏன் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை? என்பதற்கு ஜேம்ஸ் நீஷம் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் நாங்கள் அரையிறுதியில்தான் வெற்றி பெற்றோம். மிக முக்கியமான பைனல் இனிமேல் தான் இருக்கிறது. நாங்கள் விளையாட்டின் மீது எங்கள் பார்வையை மிகவும் உறுதியாகப் பெற்றுள்ளோம். பொதுவாக அரையிறுதி வெற்றியின் மகிழ்ச்சியில் சிக்கிக் கொள்வது நியூசிலாந்தின் இயல்பில் இல்லை . இன்னும் சில நாட்களில் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பதே எங்களது இலக்காக உள்ளது என தெரிவித்துள்ளார்.