160 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் அவதார் 2 : வெளியான மாஸ் அப்டேட்
அவதார் படத்தின் 2-ம் பாகம் 2020-ம் ஆண்டு திரையரங்கில் வெளியாக இருந்தது , ஆனால் கொரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் தாமதம் ஆனதால், அவதார் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படம் அவதார். பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்பட்ட இப்படம் உலக சினிமாவையே வியப்பில் ஆழ்த்தியது.
அதுமட்டுமின்றி 2500 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த அவதார் படத்தின் வெற்றிக்கு பின் அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாவதை உறுதி செய்த ஜேம்ஸ் கேமரூன், அப்படங்களுக்கான பணிகளிலும் மும்முரம் காட்டி வந்தார்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியான உடனே, அப்படம் எப்போது ரிலீசாகும் என்கிற எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இருந்தது. அவதார் படத்தின் 2-ம் பாகத்தை 2020-ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் தாமதம் ஆனதால், அவதார் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
இப்படத்தை தயாரித்துள்ள டுவெண்டியத் செஞ்சுரி நிறுவனம், இப்படம் இந்தாண்டு ரிலீசாகும் என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில், அவதார் 2 படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந் தேதி உலகமெங்கும் 160க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு ஹாலிவுட் ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.