ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பில் மதுரை கிளையின் அதிரடி உத்தரவு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அரசியல், சமூகம் உட்பட எந்த விதமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன், இவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை அவனியாபுரம் பகுதியில் கடந்த 10 வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியை நடத்துபவர் கணக்குகளை சரியாக ஒப்படைப்பதில்லை, தன்னிச்சையாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
அத்துடன் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த யாருக்கும் வாய்ப்பு வழங்குவதில்லை என தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சுந்தரம், ஆனந்தி அமர்வு முன்னிலையில் வந்த நிலையில், " அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எந்த சமூகத்திற்கோ, காளைக்கோ, மாடுபிடி வீரருக்கோ முதல் மரியாதை கொடுக்க கூடாது.
அரசியல், சமூகம் உட்பட எந்த விதமான பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்படக்கூடாது. ஜல்லிக்கட்டு கணக்கு வழக்குகளை பராமரிக்க தனியொரு வங்கிக்கணக்கையும் துவங்க வேண்டும் " என்று உத்தரவிட்டுள்ளனர்.