ஆஸ்கர் யூடியூப் தளத்தில் ஒலித்த தமிழ்... சூர்யாவின் ஜெய்பீம் படைத்த மாபெரும் வரலாறு..

success oscars official youtube channel jai bhim movie success
By Nandhini Jan 18, 2022 09:15 AM GMT
Report

ஆஸ்கர் விருதுகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சி இடம்பெற்றிருக்கிறது. அந்த யூடியூப் பக்கத்தில் ஒரு தமிழ் படத்தின் காட்சி இடம் பெறுவது இதுவே முதன்முறையாகும்.

உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான படம் 'ஜெய்பீம்'. இப்படம் ஓடிடி தளத்தில் கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

இப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு (பார்வதி அம்மாள்) நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

இப்படம் எந்த அளவுக்கு பாராட்டுக்களை பெற்றதோ அதே அளவு சர்ச்சைகளிலும் மாட்டியது. குறிப்பிட்ட சமூகத்தினரை மிகவும் கொடுமைக்காரர்களாக சித்தரித்துள்ளதாக அடுத்தடுத்து பல பிரச்சனைகளை ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் எதிர்கொண்டார் நடிகர் சூர்யா. பல்வேறு தடைகளை கடந்து ‘ஜெய் பீம்’ படம் சாதனை படைத்துள்ளது.

தற்போது இப்படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ‘ஜெய் பீம்’ படத்தின் காட்சி இடம்பெற்றிருக்கிறது. அந்த யூடியூப் பக்கத்தில் ஒரு தமிழ் படத்தின் காட்சி இடம்பெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

#SceneAtTheAcademy என்ற பெயரில் உலக சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை உலக சினிமா ரசிகர்களுக்கு ஆஸ்கர் வழங்குகிறது. இதில் ஜெய் பீம் படத்தின் 12 நிமிட காட்சியை வெளியிட்டு, படத்தை பற்றியும் நீதியரசர் சந்துருவின் முயற்சிகள் பற்றியும் பாராட்டி எழுதியும் வெளியிட்டிருக்கிறது ஆஸ்கர் விருதுகள் குழு. 

ஆஸ்கர் யூடியூப் தளத்தில் ஒலித்த தமிழ்... சூர்யாவின் ஜெய்பீம் படைத்த மாபெரும் வரலாறு.. | Jaibhim Oscars Official Youtube Channel Success