பழங்குடியின மக்களுக்கு ஜெய் பீம் படம் போட்டுக்காட்டிய சூர்யா ரசிகர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்
ஜெய் பீம் படத்தின் வெற்றியால் இருளர் இன மக்களுக்கு தமிழகம் முழுக்க பல்வேறு உதவிகளை செய்தும் படத்தை பார்க்கவைத்தும் வருகிறார்கள் சூர்யா ரசிகர்கள்.
தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ஜெய் பீம் படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. கடந்த 2 ஆம் தேதி வெளியான ஜெய் பீம் படத்தைப் பார்த்துவிட்டு இந்தியா முழுக்க பாராட்டி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் முதனை. அப்பகுதி இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு 1993-ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தவறே செய்யாமல் காவல்துறையால் லாக்அப்பில் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கிக்கொடுத்தார், அப்போது வழக்கறிஞராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு. வலி நிறைந்த இந்த உண்மை சம்பவத்தையே தற்போது ஜெய் பீம் படமாக எடுத்திருக்கிறார்கள்.
மேலும், ஜெய் பீம் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகில் உள்ள பொந்து புளி கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை திண்டுக்கல் மேற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக வழங்கியுள்ளனர். இதனை நடிகர் சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கையெடுத்துக் கும்பிட்டுள்ளார்.
மேலும், சிவகாசி சூர்யா நன்பணி மன்றத்தினர் சிவகாசியை சேர்ந்த மழைவாழ் பழங்குடியினர் மக்களுக்கு ஒரு வாரத்திற்க்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.