“ஜெய் பீம்” திரைப்பட காட்சிகள் மாற்றம் - படக்குழு அதிரடி
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் உதவி ஆய்வாளரின் பெயர் குரு என்பவதையும். அவரை வன்னியர் போல சித்தரிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்த நிலையில் சம்மந்தப்பட்ட காட்சியில் திருத்தம் செய்து படக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
நடிகர் சூர்யா நடித்துள்ள 39-வது படம் 'ஜெய் பீம்'. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி உள்ளார்.
நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஜோதிகா மற்றும் சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், கடந்த 2-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே ஜெய்பீம் படத்தில் ஒரு காட்சியில் குரு என்ற பெயரில் காவல் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவரின் பின்னால் வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்றிருக்கும். இதற்கு வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
உண்மையில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், கொலை செய்ததாக தண்டிக்கப்பட்டவர் தலித் கிறித்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தது.
உண்மைக்கு மாறாக வன்னியர் சமுகத்தைச் இழிவுப்பத்துவது போல் சித்தரிப்பதாகவும், எனவே குரு என்ற பெயரையும். நாள்காட்டியில் வன்னியர் சங்கம் என வரும் காட்சியையும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட காட்சியின் நாட்காட்டியில் இடம்பெற்றிருந்த வன்னியர் சங்கம் என்ற பெயருக்கு பதிலாக இந்து கடவுளின் உருவபடத்தை மாற்றி படக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.