'முதலமைச்சர் வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை': நடிகர் சூர்யா நன்றி

Suriya MK Stalin Jai Bhim Thanks To
By Thahir Nov 04, 2021 02:05 PM GMT
Report

நரிக்குறவர், இருளர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசித்துவரும் நரிக்குறவர், இருளர் மக்கள் நீண்ட காலமாக வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை, சாதிச்சான்று உள்ளிட்டவை வழங்க கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அவர்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை.

காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "மேலும் எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது.

இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி" என நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இருளர் சமூக மக்கள் சந்திக்கும் அவல நிலை குறித்து நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.